தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஃபார்ம் சாம்பியன்ஸ் டிராபியிலும் தொடரும்: பென் ஸ்டோக்ஸ்

சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்னோட்டமாக இங்கிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி மோர்கன் சதத்தால் 339 ரன்கள் குவித்தது. பின்னர் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 267 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

நேற்று 2-வது போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 330 ரன்கள் சேர்த்தது. பென் ஸ்டோக்ஸ் அபாரமாக விளையாடி 79 பந்தில் 11 பவுண்டரி, 3 சிக்சருடன் 101 ரன்கள் சேர்த்தார். பின்னர் 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 328 ரன்கள் சேர்த்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனக்கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறது.

சதம் அடித்து அணியின் ஸ்கோர் 330 ரன்கள் உயர்வதற்கு முக்கிய காரணமாக இருந்த பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். அப்போது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இங்கிலாந்து அணியின் சிறப்பான ஃபார்ம் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் தொடரும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் ‘‘எங்களால் இந்த வெற்றியை தொடர முடியும். இந்த ஃபார்ம் சாம்பியன்ஸ் டிராபியில் தொடரும் என்று நம்புகிறேன். முழங்காலில் சற்று காயம் ஏற்பட்ட உணர்வு இருப்பதால் மூன்று ஓவர்களுக்கு மேல் பந்து வீசவில்லை. ஆனால், பேட்டிங், பீல்டிங் மற்றும் ஓடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை’’ என்றார்.