இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வருகிற 1-ந்தேதி ஐ.சி.சி.யின் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. சொந்த மண்ணில் விளையாடுவதால் கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இங்கிலாந்து அணி 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் அந்த அணி அதிக நம்பிக்கையில் உள்ளது.
அதேவேளையில் சாம்பியன் பட்டம் வெல்ல ஆஸ்திரேலியாவும் தீவிரமாக உள்ளது. நடப்பு சாம்பியனான இந்தியாவும் குறிவைத்துள்ளது.
இந்நிலையில் ஐ.சி.சி. நடத்தும் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்கள் இங்கிலாந்தில் நடைபெற்ற போதிலும், இங்கிலாந்து அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை என்று ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் லீமென் கூறியுள்ளார்.
இதுகுறித்து லீமென் கூறுகையில் ‘‘சொந்த மண்ணில் சாம்பியன்ஸ் டிராபி நடப்பது இங்கிலாந்து அணிக்கு சாதகம்தான். ஆனால், சொந்த மண்ணில் இதுவரை இங்கிலாந்து ஐ.சி.சி. நடத்தும் மிகப்பெரிய தொடர்களில் சாதித்தது கிடையாது. சொந்த மைதானத்தில் விளையாடும்போது நெருக்கடி ஏற்படும். எங்களுக்கும் 2015 உலகக்கோப்பை தொடரில் விளையாடும்போது நெருக்கடி இருந்தது. அது மிகப்பெரிய தொடர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரை விட உலகக்கோப்பை தொடர் கடினமானது. ஆனால், சாம்பியன்ஸ் டிராபியில் தரமான 8 அணிகள் மட்டுமே பங்கேற்கும். நாக்அவுட் போட்டிகள் போன்று அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். ஒரு போட்டியில் தோல்வியடைந்து விட்டால், அதன்பின் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.
தலைசிறந்த 8 அணிகள் விளையாடுகின்றன. இதில் எந்தவொரு அணியாலும் வெற்றி பெற முடியும் என்ற நிலை இருப்பது சிறப்பான விஷயம். இங்கிலாந்து அணிக்கு சாதகமாக இருப்பதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. அதேவேளையில் மற்ற அணிகளாலும் கோப்பையை வெல்ல முடியும்’’ என்றார்.