கருணாநிதிக்கு வாழ்த்து சொன்ன விஜயகாந்த்.. திமுகவுடன் கூட்டணிக்கு அச்சாரமா ?

திமுக தலைவர் கருணாநிதிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் மற்றும் வைரவிழா வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டு ஆகஸ்ட்டில் தேமுதிக என்ற அரசியல் கட்சியை மதுரையில் முறைப்படி தொடங்கினார் விஜயகாந்த்.

2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக என்ற இரு பெரும் கட்சிகளை எதிர்த்து தனித்துப் போட்டியிட்ட தேமுதிக, 8 சதவீத வாக்கு வங்கியைப் பெற்றது. விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் எம்எல்ஏ-வாக வெற்றி பெற்று முதன் முறையாக சட்டசபைக்குள் காலடி எடுத்து வைத்தார்.

அப்போது தேமுதிகவுக்கு 8 தொகுதிகள் தர சம்மதித்தது திமுக. இந்தக் கூட்டணியில் சேர்ந்தால் 8 எம்பி-க்கள், 2 அமைச்சர்கள் நிச்சயம் என சில நிர்வாகிகள் சொன்னபோது, யாரோ ரெண்டு பேரை அமைச்சராக்குவதற்காக எனது முதல்வர் கனவை முடக்கணுமா? என்று கோபப்பட்ட விஜயகாந்த் தனித்து களமிறங்கினார்.

அடுத்து நடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார் விஜயகாந்த். 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளை கைப்பற்றியது தேமுதிக. விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவராக உருவெடுத்தார்.

தொடர்ந்து 2014ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக வுடன் கூட்டணி அமைத்த தேமுதிக, போட்டியிட்ட எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. பின்னர் 2016 சட்டசபைத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது தேமுதிக. முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.

இதுவரை நடந்து முடிந்த தேர்தல்களில் அதிமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி ஆகிய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளது தேமுதிக. ஆனால் தொடர்ந்து திமுக மீதும் கருணாநிதி மீதும் கடுமையாக சாடிவந்தார் விஜயகாந்த். ஏனேனில் கோயம்பேடு பஸ் நிலையம் அருகே இருந்த விஜயகாந்தின் ஆண்டாள் – அழகர் திருமணம் மண்டபம் இடிக்க திமுக தான் காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டிய விஜயகாந்த்இ கருணாநிதியுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வந்தார்.

இந்நிலையில் தற்போது அவரின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துக் கூறியுள்ளார் விஜயகாந்த். கட்சி ஆரம்பித்த பின்னர் முதல் முறையாக அவர் வாழ்த்து கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் விஜயகாந்த் திமுகவுடன் நெருக்கம் காட்ட முயல்வதாகவும் கருத்து உலாவுகிறது. தற்போது உள்ள அரசியல் சூழலில் தேமுதிகஇ திமுகவுடனே கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.