பா.ஜ.க. ஆதரவு முதலாளிகளுக்காக எருமைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டம்: மம்தா குற்றச்சாட்டு

இறைச்சிக்காக கால்நடைகளை விற்பனை செய்வதற்கும், கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்வதற்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த விஷயத்திலும் மத்திய அரசை கடுமையாகச் சாடியுள்ளார்.

தாகேஸ்வரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில், “கால்நடை வதை தொடர்பான அறிவிப்பாணையில் எருமை மாடுகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எருமை இறைச்சி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சிலர் பா.ஜ.க.வுக்கு நெருக்கமாக உள்ளனர். அதனால்தான் மத்திய அரசு எருமை மாடுகளை வதை செய்வதற்கு அனுமதி அளிக்க திட்டமிடுகிறது.

பா.ஜ.க.விடம் 29 சதவீத வாக்குகள் மட்டுமே உள்ளது. ஆனால், அவர்கள் ஒட்டுமொத்த மக்களையும் வதைக்க முயற்சிக்கிறார்கள். யார் என்ன சாப்பிட வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கு அவர்கள் யார்? யார் என்ன உடை அணிய வேண்டும் என்று சொல்வதற்கு அவர்கள் யார்? இது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம் ஆகும்” என்றார்.