தேர்தல்களில் அடுத்தடுத்த தொடர் தோல்விகளால் துவண்டு போய் இருக்கும் காங்கிரஸ் கட்சி, மாநில கட்சிகளின் உதவியை நாட தொடங்கியுள்ளது. அதற்கு அச்சாரமிடும் வகையில் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் ஒன்று திரட்டியுள்ளது.
காங்கிரசின் இந்த முயற்சிக்கு நாடு முழுவதும் உள்ள 17 கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அந்த 17 கட்சி தலைவர்களை அழைத்து சோனியா ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் 17 கட்சி தலைவர்களுக்கு விருந்தும் அளித்தார். இதையடுத்து மீண்டும் 17 கட்சித் தலைவர்களை அழைத்து பிரமாண்ட கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வருகிற 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆந்திரா மாநிலம் குண்டூரில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா இதில் பங்கேற்கவில்லை. அதற்கு பதில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி இந்த கூட்டத்துக்கு தலைமை ஏற்க உள்ளார்.
குண்டூரில் நடக்கும் பிரமாண்ட கூட்டத்தில் தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளன. இந்த கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.