அனில் கும்ப்ளேவிற்கு ஆதரவுக் கரம் நீட்டும் ஹர்பஜன் சிங்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் அனில் கும்ப்ளேவிற்கும், கேப்டனுமான விராட் கோலிக்கும் இடையில் மோதல் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து விராட் கோலியும், கும்ப்ளேயும் எந்த கருத்துக்களும் கூறவில்லை.

விளையாட்டு பயிற்சி, போட்டியில் மட்டுமல்ல வீரர்களின் அறையிலும் ஹெட்மாஸ்டர் போன்று செயல்படுகிறார் என்பதே அந்த குற்றச்சாட்டு. இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில் கும்ப்ளேவிற்கு முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.

அனில் கும்ப்ளே – விராட் கோலி விவகாரம் குறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘அனில் கும்ப்ளே உடன் எப்படிப்பட்ட தொடர்பு இருந்தது என்பதை, தற்போதுள்ள வீரர்கள்தான் சொல்ல வேண்டும். கும்ப்ளே உடன் நான் 15 வருடங்கள் விளையாடி உள்ளேன். அவருடன் எனக்கு எந்தவிதமான மோதலும் ஏற்பட்டதில்லை. அவர் ஒரு சிறந்த பந்து வீச்சு மூளையை பெற்றவர். மேலும், எல்லோருக்கும் உதவி புரிவார்.

சரியான புத்திசாலி. என்னை சிறந்த பந்து வீச்சாளராக்கியதில் அவருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. நான் இன்று இந்த நிலைமையில் இருக்கிறேன் என்றால், அதற்காக குமப்ளேவிற்கு நன்றி தெரிவித்தே ஆக வேண்டும்.

அனில் கும்ப்ளே மிகவும் கண்டிப்பானவர். கிரிக்கெட் பற்றி அவரிடம் எப்போதும் நீங்கள் பேசலாம். மிகவும் கடின உழைப்பாளி. கடைசி பந்து வீசி முடிக்கும் வரை யாரும் வெளியே செல்ல முடியாது.

அவர் கடினமானவராக இருந்தாலும், திறமை படைத்தவர்களை விட, கடின உழைப்பாளிக்கு மரியாதை கொடுப்பார். ஒரு பயிற்சியாளராக, அவர் இந்திய அணியை நல்ல இடத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். உதாரணத்திற்கு கடந்த வருடம் இந்திய அணியின் வெற்றியை கூற முடியும்’’ என்றார்.