டோனி 2019 உலகக்கோப்பை வரை விளையாட வேண்டும்: பிளமிங் விரும்புகிறார்

இந்திய அணியின் சாதனைக் கேப்டன் என்று பெயரெடுத்தவர் மகேந்திர சிங் டோனி. தற்போது கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் பணியை மட்டுமே செய்து வருகிறார்.

டோனியின் பேட்டிங் திறமை குறைந்து வருகிறது. அவரது இடத்திற்கு வருவதற்காக ரிஷப் பந்த், லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக் போன்றவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் டோனி வழிவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து 13 ஒருநாள் போட்டியில் 443 ரன்கள் எடுத்துள்ளார் டோனி. சராசரி 34.07 ஆகும். அவரது வழக்கமான சராசரி 51-ஐ விட இது குறைவானதே. ஆனால் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, அணி தேர்வாளர்கள் டோனி மீது நம்பிக்கை வைத்துள்ளார்.

இதற்குமுன் டோனியிடம் ஓய்வு குறித்து கேட்கும்போது, தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரைப் பொறுத்து 2019-ம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது குறித்து முடிவு செய்வேன் என்றார்.

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், டோனியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் அணியில் இணைந்து பணியாற்றிவருமான ஸ்டீவன் பிளமிங், டோனி 2019 உலகக்கோப்பை வரை விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பிளமிங் கூறுகையில் ‘‘டோனி இடத்திற்கு ஏராளமான வீரர்கள் வர முடியும். ஆனால் தற்போதைய நிலையில் டோனி மட்டுமே அந்த இடத்திற்காக உள்ளார். இந்திய அணிக்கு டோனி தனது மகத்தான் பங்களிப்பை அளிக்க வேண்டும். 2019 உலகக்கோப்பை வரும்போது அவருக்கு 38 வயதுதான் ஆகும்’’ என்றார்.