நம் கலாச்சாரத்தில் குழந்தைகளுக்கு முதல் மொட்டையும், காதுகுத்தும் சடங்கும் தவறாமல் கடைபிடிக்கும் விஷயங்கள்! இதனைகட்டாயம் கோயிலில் வைத்துதான் செய்கிறோம். பலர் திருமணங்களை கூட கோயிலில்தான் நிகழ்த்துகின்றனர். கோயிலில் சுபகாரியங்கள் செய்வதால் என்ன நன்மை? சத்குரு விளக்குகிறார்!
யோகாவை எத்தனை பேர் கற்றிருப்பார்கள்? நம்மிடம் கற்றவர்களிலேயே எத்தனை பேர் தொடர்ந்து யோகா செய்கிறார்கள்? கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தாகம் எத்தனை பேரிடம் இருக்கும்? ஒரே நேரத்தில் அனைவரிடமும் நீங்கள் யோகா பற்றி விளக்கிக் கடைப்பிடிக்கவைக்க முடியுமா?
அது மட்டுமல்ல, நீங்கள் இப்போது யோகா கற்றுக் கொண்டீர்கள், ஆனால், உங்கள் கணவரையோ அல்லது மனைவியையோ யோகா வகுப்புக்கு அழைத்து வர விரும்புகிறீர்கள், ஆனால் முடியவில்லை. அப்படியென்றால், அவர்களுக்கு ஆன்மிகத்தில் என்னவழி? இதற்காகத்தான் நமது கலாசாரத்தில் சக்தி நிலை நிறைந்த கோயில்கள் இருந்து வந்தன. நமது உயிருக்கே மூலமானவன் யாரோ, அந்தத் தன்மை எதுவோ, அதனுடன் நாம் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். கோயில் போன்ற சக்தி தலங்கள் இதற்கு ஒரு வாய்ப்பு.
யோகாவின் உதவியால் படைத்தலுக்கு மூலமான அந்தத் தன்மையுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால், பலருக்கு அப்படி தொடர்பு வைத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, அப்படிப்பட்டவர்களின் உதவிக்காக கோவில்கள். உங்களால் வீட்டின் கதவைத் திறந்து விழிப்பு உணர்வுடன் வெளியேற முடியவில்லை.
எனவே வீட்டுக்குள் ஒரு புகைபோக்கி அமைத்துத் தருகிறோம். கதவை உங்களுக்குத் திறக்கத் தெரியவில்லை என்றாலும் எப்படியோ அலைந்து திரிந்து புகை போக்கி வழியாகவாவது வெளியேறி விடுவீர்கள் அல்லவா? அதற்குத்தான் சக்தி நிலை கொண்ட கோவில்கள். ஆனால், ஒரு காரணமும் இல்லாமல் அனைவரும் தொடர்ந்து கோவிலுக்கு வந்து விடுவார்களா? எனவேதான் குழந்தையில் இருந்தே இதற்கான வாய்ப்புகள்.
குழந்தைக்கு முதலில் முடி எடுப்பது என்றாலும் சரி, குழந்தைக்கு முதலில் உணவு ஊட்டுவதென்றாலும் சரி, அல்லது குழந்தைக்கு கல்வி ஆரம்பித்தாலும் சரி, கோவிலில் வைத்துச் செய்வதை கலாசாரம் ஆக்கினார்கள். இவையெல்லாம் கோவில் போன்ற சக்தித் தலங்களுக்கு உங்களை வரவழைப்பதற்கான வழிகள்.
நாமும் இதே காரணத்துக்காகவே இப்போது லிங்க பைரவி கோயிலில் காது குத்துவது, முடி எடுப்பது போன்றவற்றை பௌர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் அனுமதித்து வருகிறோம். நாம் இப்படி அனுமதிப்பதால் எதிர்மறையாக நினைத்துக் கொள்ள வேண்டாம். சிறுசிறு வாய்ப்புகளையும் தெய்வீகத்துக்கான படியாக மாற்றிக் கொள்ள நமக்குத் தெரிய வேண்டும்.
லிங்க பைரவி, யாருக்கு எது தேவை என்று பார்த்து அவளாகவே கொடுப்பாள். எனவேதான் மக்கள் வந்து பயனடைய வேண்டும் என்பதற்காக லிங்க பைரவி கோவிலிலும். இத்தகைய வாய்ப்புகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன!