மாட்டிறைச்சி சாப்பிட்டால் ஹீரோவா?: கஸ்தூரி பாய்ச்சல்

நடிகை கஸ்தூரி டுவிட்டரில் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்கள் மத்தியில் சூழ்நிலை ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன் என்றும், போருக்கு தயாராக இருங்கள் என்று பேசியதையும் டுவிட்டரில் விமர்சித்தார். வருவேனா மாட்டேனா என்று வருட கணக்கில் யோசிக்கிறார். போர் போர் அக்கப்போர் என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி காரசாரமாக மோதிக்கொண்டனர். இந்த நிலையில் மாட்டிறைச்சி குறித்தும் சர்ச்சை கருத்தை நடிகை கஸ்தூரி வெளியிட்டு இருக்கிறார்.

மாட்டிறைச்சி தடை குறித்த மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கேரளாவிலும், தமிழகத்திலும் மாட்டிறைச்சி திருவிழாவும் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை ஐ.ஐ.டி.யில் மாட்டுக்கறி திருவிழா நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இது குறித்து நடிகை கஸ்தூரி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

“மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடத்தியது தவறானது. மாட்டிறைச்சி திருவிழா என்பது தவறான சிந்தனை. ஒரு தரப்பினரிடம் கோபத்தை தூண்டவே இந்த போராட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. இதற்காக மாணவர்கள் மீது தாக்குதலும் நடந்து இருக்கிறது. இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டதை நான் எதிர்க்கிறேன்.

ஆனால் எனது உணவுப்பழக்கம் என்னை சுற்றி இருக்கும் மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக இருக்கக்கூடாது. மாட்டிறைச்சி சாப்பிட்டதால் நீங்கள் ஒன்றும் ‘ஹீரோ’ இல்லை. முத்தப் போராட்டத்துக்கும் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?. ஐ.ஐ.டி.யில் படித்த மாணவர்கள் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடத்தியதை தவிர்த்து இருக்கலாம். அவர்களுக்கு வன்முறை கைகொடுக்கவில்லை”.

இவ்வாறு நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

நடிகை கஸ்தூரி கருத்துக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. அவரை கண்டித்து பலர் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.