சென்னை ராணி சீதை மன்றத்தில் ‘நான் குற்றம்சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழா கடந்த 2009-ம் ஆண்டு நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசினார். இதுகுறித்து ஆயிரம்விளக்கு போலீசார் வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 3-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டில் ஆஜரான வைகோ சொந்த ஜாமீனில் செல்ல மறுத்து விட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இந்த வழக்கு சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் திடீரென இந்த வழக்கில் வைகோ ஜாமீன் கேட்டு மனு செய்து கடந்த வாரம் சிறையில் இருந்து வெளியில் வந்தார். இந்த வழக்கு இன்று காலையில் செசன்சு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த 5 செசன்சு கோர்ட்டு நீதிபதி கோகிலா, விசாரணையை வரும் 17-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
கோர்ட்டில் இருந்து வெளியில் வந்த வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “மாட்டிறைச்சி விவகாரத்தில் கேரளா, மேற்கு வங்கத்தை போல தமிழக அரசும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். மாட்டிறைச்சி விருந்து ஏற்பாடு செய்த ஐ.ஐ.டி மாணவர் சூரஜை தாக்கிய மாணவர் மணீஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற செயல்கள் நடக்காமல் ஐ.ஐ.டி. நிர்வாகம் பார்த்து கொள்ள வேண்டும்”.
இவ்வாறு அவர் கூறினார்.