தென்னிலங்கையில் அனர்த்தம் இடம்பெற்ற இடங்களை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இன்று சனிக்கிழமை நேரில்சென்று பார்வையிடவுள்ளனர்.
அண்மைக்காலமாக நீடித்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாக 208உயிர்களைக் காவு கொண்டுள்ள பாரிய அனர்த்தம் தென்னிலங்கையில் நிகழ்ந்திருந்தது.
தென்னிலங்கையின் காலி, மாத்தறை மாவட்டங்களும், இரத்தினபுரி, களுத்துறைமாவட்டங்களும் இந்த அனர்த்தத்தின் காரணமாக முழுமையாக சீர்குலைந்துள்ளன.
மழையுடன் கூடிய காலநிலை தொடர்கின்ற நிலையில் அனர்த்தத்தால் ஏற்பட்ட பகுதிகளைநேரில் சென்று பார்வையிட்டு ஆராய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று சனிக்கிழமை மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களுக்குச்செல்கின்றனர்.
மேற்படி குழுவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா எம்.பி.,கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. உள்ளிட்ட மற்றும் சிலஎம்.பிக்களும் செல்கின்றனர்.