சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இந்திய அணி கடந்த 30-ந்தேதி தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் வங்காள தேசத்தை எதிர்கொண்டது. சாம்பியன்ஸ் டிராபி லீக் ஆட்டத்தில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
இதற்கான இந்திய அணி பர்மிங்காமில் தனது பயிற்சியை தொடங்கியுள்ளது. எட்ஜ்பாஸ்டனில் இன்று நியூசிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான போட்டி நடைபெற இருக்கிறது. இதனால் இந்தியாவிற்கு எட்ஜ்பாஸ்டனில் உள்ள முதன்மையான பயிற்சி இடம் வழங்கப்படவில்லை. அதற்குப்பதிலாக அருகில் உள்ள ஒரு மைதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வசதியாக இல்லை என விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் கும்ப்ளே ஆகியோர் தங்களது அதிருப்தி தெரிவித்துள்ளனர். புவனேஸ்வர் குமார், மொகமது ஷமி ஆகியோர் சுமார் 30 யார்டு தூரம் ஓடிவந்து பந்து வீசுவார்கள். அங்கு 30 யார்டு ஓடுவதற்கு வசதியில்லை.
இதுகுறித்து விராட் கோலி மற்றும் அனில் கும்ப்ளே அணியின் மானேஜர் கபில் மல்கோத்ராவிடம் புகார் அளித்தனர். அவர் வார்க்ஷைர் அதிகாரிகளுடன் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இன்றைய போட்டி முடிந்த பின்னர், நாளை எட்ஜ்பாஸ்டன் மைதானம் இந்திய அணியின் பயிற்சிக்கு வழங்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், பாகிஸ்தான் அணி கடந்த ஒரு வாரமாக எட்ஜ்பாஸ்டனில் பயிற்சி மேற்கொண்டதால் அந்த அணிக்கு முதன்மையான மைதானத்தில் பயிற்சி எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.