இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் இசாந்த் ஷர்மா. இந்தியா 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெல்வதற்கு இவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. தற்போது அவருக்கு ஒருநாள் அணியில் இடம்கிடைப்பதில்லை. அதேவேளையில் உமேஷ் யாதவ், மொகமது ஷமி, பும்ப்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர்களால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எந்தவொரு அணியையும் வீழ்த்த முடியும் என்று இசாந்த ஷர்மா கூறியுள்ளார்.
இதுகுறித்து இசாந்த் ஷர்மா கூறுகையில் ‘‘இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள். இங்கிலாந்து மண்ணில் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். முக்கியமான விஷயம் ஒவ்வொரு சூழ்நிலையில் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்த வேண்டும் என்ற மனஉறுதி, சுய நம்பிக்கையை வைத்துள்ளனர்.
ஒவ்வொருவரும் மிகவும் நெருக்கடியான போட்டியிலும், எந்தவொரு சூழ்நிலையிலும் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள். அவர்கள் சிறப்பாக பந்து வீசுவார்கள் என்பது உறுதி. இதனால் எந்தவொரு அணியையும் வீழ்த்தும் திறமை அவர்களிடம் உள்ளது.
உமேஷ் யாதவ் சிறப்பாக பந்து வீசி வருகிறார். டெத் ஓவரில் பும்ப்ரா அபாரமாக பந்து வீசக்கூடியவர். அவரால் சிறந்த யார்க்கர் பந்தை வீச முடியும்’’ என்றார்.