ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி 6 நாட்கள் சுற்றுப் பயணமாக ஜெர்மனி, ரஷியா, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா பயணத்தை முடித்து நேற்றிரவு புறப்பட்ட பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் விமான நிலையத்திற்கு சென்றடைந்தார்.

ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு பிரான்சு புறப்பட்ட மோடி, அவரது டுவிட்டர் பக்கத்தில் ரஷ்யாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் பல திட்டங்கள் மற்றும் பயனுள்ள கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன். இது இந்தியா – ரஷியா நட்புக்கு உறுதுணையாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பின்னர் சர்வதேச வர்த்தக மாநாட்டிலும் கலந்து கொண்டார். ரஷிய பயணத்தின் போது இரு நாடுகளுக்குமிடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் கூடங்குளத்தில் 5-வது, 6-வது அணு உலைகளை அமைப்பது தொடர்பான ஒப்பந்தமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் புதியதாக பொறுப்பேற்றுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பாதுகாப்பு, அணுஆயுதம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நகர்ப்புற வளர்ச்சி, ரயில்வே உள்ளிட்ட பிரிவுகளில் இந்தியாவில் முதலீடு செய்துள்ள பிரான்ஸ், இந்தியாவில் முதலீடு செய்யும் நாடுகளில் 9-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.