தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி, இன்றுவரை அந்த மாவட்ட மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் அரசின் கவனத்தை ஈர்க்க விதவிதமாக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இன்றளவும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நேரத்தில், ‘ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திடம் உள்ள மீத்தேன் துரப்பன குத்தகையை தங்கள் பெயருக்கு மாற்றித் தருமாறு தமிழக அரசிடம் ஜெம் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது’ என்று இன்று பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் போட்டுள்ள கர்நாடகாவைச் சேர்ந்த ஜெம் லேபராட்டரீஸ் நிறுவனம் ‘நெடுவாசல் குத்தகையை’ ஓ.என்.ஜி.சி., நிறுவனத்திடம் இருந்து தங்கள் பெயருக்கு மாற்றித்தர தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதைப் பார்க்கும்போது, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற அ.தி.மு.க. அரசு திரைமறைவில் மத்தியில் உள்ள பா.ஜ.க அரசுக்கு துணை போய்க் கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக்குகிறது. இது, விவசாயிகளின் நலனை அடகுவைத்து தங்களின் சுயநலனை காப்பாற்றிக்கொள்ள முதல்-அமைச்சரும், சம்பந்தப்பட்ட அ.தி.மு.க. அமைச்சர்களும் செயல்படுவதாக அமைந்திருக்கிறது.
அதைவிட மிக முக்கியமாக, பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள ஜெம் லேபராட்டரீஸ் முதுநிலை அதிகாரியும், செய்தித் தொடர்பாளருமான ஹரி பிரசாத், ‘குத்தகையை எங்கள் பெயருக்கு மாற்றுவதில் தமிழக அரசின் சுரங்கங்கள் மற்றும் கனிமவளத் துறையுடனான கடிதப் போக்குவரத்தினை மீத்தேன் எடுப்பதன் முன்னேற்ற நடவடிக்கையாகக் கருதுகிறோம்’ என்றும், ‘ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழக அரசின் சுரங்கங்கள் மற்றும் கனிமவளத் துறைக்கு ஜெம் நிறுவனம் கடிதம் எழுதியிருந்தது. இதில் சில கூடுதல் விளக்கங்களை கனிமவளத் துறை கேட்டது. இதற்கான பதிலும் ஜெம் நிறுவனம் சார்பில் சில தினங்களுக்கு முன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனவே விரைவில் குத்தகை மாற்றித் தரப்படும் என ஜெம் நிறுவனம் நம்புகிறது’ என்றும் பேட்டியளித்து இருப்பதைப் பார்க்கும்போது, அ.தி.மு.க. அரசின் மீது அந்த தனியார் நிறுவனத்திற்கு உள்ள நம்பிக்கை மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும், ஜெம் நிறுவனமும் ஏற்கனவே கடித தொடர்பில் இருக்கிறார்கள் என்பதும் அம்பலப்படுத்தியிருக்கிறது. ஆகவே நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எப்படியாவது செயல்படுத்தவைப்பதற்கு அந்த தனியார் நிறுவனத்திற்கு அ.தி.மு.க. அரசு ரகசியமாக முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
ஏற்கனவே மத்திய அரசின் சார்பில் நெடுவாசல் திட்டம் குறித்து அனுப்பப்பட்ட கடித விவரங்களை முதல்-அமைச்சர் வெளியிடவில்லை. இப்போது அந்தத் திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் தனியார் நிறுவனத்துடனும் கடிதத் தொடர்பில் அ.தி.மு.க. அரசு இருக்கிறது. விவசாயிகளின் நலன்களை புறந்தள்ளிவிட்டு நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசுக்கு துணைபோகப்போகிறதா அ.தி.மு.க. அரசு என்பதை தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக விளக்க வேண்டும்.
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து ஏற்கனவே மத்திய அரசு தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதம், தற்போது தனியார் நிறுவனமான ஜெம் நிறுவனம் எழுதியுள்ள கடிதம், தனியார் நிறுவனத்திற்கு தமிழக அரசின் கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை எழுதியுள்ள கடிதம் ஆகியவற்றை தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
விவசாயிகளின் நலனை மிக மோசமாக பாதித்து, தமிழக விவசாயிகளின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் பறிக்கும் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனத்திற்கு துணை போகக்கூடாது என்று அ.தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.