பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக கடந்த 31-ந் தேதி இரவு ரஷியாவுக்கு சென்றார். அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்குக்கு சென்ற அவர், நேற்று முன்தினம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், நேற்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ‘செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார கூட்டமைப்பு’ கூட்டம் நடைபெற்றது. அதில், ரஷிய அதிபருடன் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். அந்த அமைப்பின் கூட்டத்தில் இந்திய பிரதமர் ஒருவர் பங்கேற்பது இதுவே முதல்முறை ஆகும்.
சர்வதேச முதலீட்டாளர்கள் பலர் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்தியாவில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இந்தியாவில் வானமே எல்லை. தொழில் செய்வதற்காக, நீங்கள் விரும்பிய எந்த பகுதிக்கும் செல்லலாம். ஆகவே, இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருமாறு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இந்தியாவின் 120 கோடி மக்களும் உங்களை அழைக்கிறார்கள். உலகின் பழமையான நாகரிகம் உங்களை அழைக்கிறது.
வளரும் இந்தியாவை நோக்கிய எனது அரசின் பயணம், உள்கட்டமைப்பு, வேளாண்மை, உற்பத்தி, சேவை ஆகிய துறைகளின் முதலீடு மீது கட்டப்பட்டது. 50 நகரங்களுக்கு மெட்ரோ ரெயில் திட்டமும், 500 நகரங்களுக்கு திடக்கழிவு மேலாண்மை மற்றும் குடிநீர் வசதிகளும் தேவைப்படுகின்றன.
அத்துடன், உலகின் இரண்டாவது பெரிய ரெயில்வே நெட்வொர்க் வசதி, இந்தியாவில்தான் உள்ளது. அதை பாதுகாப்பானதாக, நம்பகமானதாக தரம் உயர்த்த வேண்டும். தூய்மை இந்தியா திட்டப்படி, 2 ஆயிரத்து 500 கி.மீ. நீள கங்கை நதியை சுத்தப்படுத்த வேண்டி உள்ளது. இவை அனைத்தும் முதலீட்டுக்கு அதிக வாய்ப்பை அளிக்கின்றன.
பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி, சுற்றுலா, உணவகங்கள், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி போன்ற துறைகளிலும் இந்தியாவில் நல்ல வாய்ப்பு உள்ளது.
பருவநிலை மாற்றத்தை பொறுத்தவரை இந்தியா ஒரு பொறுப்பான நாடு. இயற்கையை நாம் பாதுகாக்க வேண்டும், சுரண்டக்கூடாது. பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் வருவதற்கு முன்பிருந்தே சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியா பாடுபட்டு வருகிறது.
எனவே, பாரீஸ் ஒப்பந்தம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எதிர்கால தலைமுறைக்காக பருவநிலையை பாதுகாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பயங்கரவாதம் குறித்து பிரதமர் மோடி தனது பேச்சில் கூறியதாவது:-
பயங்கரவாதம், மனித இனத்தின் எதிரி. எனவே, நல்ல பயங்கரவாதம், கெட்ட பயங்கரவாதம் என்ற விவாதத்தில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிக்க ஒன்றுபட வேண்டும். பயங்கரவாதிகளுக்கு நிதிஉதவி, ஆயுதம், தொலைத்தொடர்பு வசதி ஆகியவை கிடைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு மோடி கூறினார்.