நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், எப்போது, எப்படி இறந்தார் என்பதில் இன்றுவரை சர்ச்சை உள்ளது.
ஆனால், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் நேதாஜி மரணம் தொடர்பாக எழுப்பிய ஒரு கேள்விக்கு மத்திய அரசு பதில் அளிக்கையில், “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ம் ஆண்டு தைவானில் நடந்த விமான விபத்தில் மரணம் அடைந்தார்” என முடிவாக கூறி உள்ளது. இதை மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சாடி, மத்திய அரசின் முடிவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார்.
இதுபற்றி அவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில், “எந்தவிதமான ஆதாரமும் இன்றி, மத்திய அரசு எடுத்துள்ள ஒருதலைப்பட்சமான முடிவு கண்டு அதிர்ச்சி அடைகிறேன். நேதாஜி, இந்த மண்ணின் மாபெரும் மைந்தன். அவரால் இந்த மாநிலம், நாடு, ஒட்டுமொத்த உலகமே பெருமிதம் கொள்கிறது. இத்தகைய உயர்ந்த மனிதர் பற்றிய ஒரு கேள்வியை இத்தனை சாதாரணமாக கையாளக்கூடாது.
இதில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?” என எழுதி உள்ளார். அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் அமலாகும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள சரக்கு, சேவை வரி விதிப்பை பொறுத்தமட்டில், தற்போதைய வடிவில் அமல்படுத்துவதற்கு தனது அரசு ஆதரவு அளிக்காது என்றும் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.