சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையாளர்களை கைது செய்யுங்கள்:மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தல்

இலங்கையில் சிறுபான்மையினரை இலக்கு வைத்து பௌத்த தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை ஜனாதிபதியிடம் சுயாதீன மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் இலங்கை ஜனாதிபதிக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

அதில், இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக சட்டம் ஒழுங்கு உரிய முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த அமைப்பு கேட்டுள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட்ட ராஜதந்திரிகள் விஜயம் செய்த இஸ்லாமிய தலம் ஒன்றின் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது பௌத்த தீவிரவாதிகளின் செயல் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த காலத்தில் கிறிஸ்தவ மதத்துக்கு எதிரான தாக்குதல்களும் அது தொடர்பில் பின்னர் விசாரணைகள் நடத்தப்படாமையையும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கையின் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இலங்கையின் 2007, 56 ஆம் இலக்க குற்றவியல் சட்டத்தின்கீழ் குற்றமிழைத்தவர்களை கைதுசெய்து தண்டனை வழங்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பம் என கோரியுள்ளது.