சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைர விழா மற்றும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைர விழா மற்றும் பிறந்தநாள் நிகழ்ச்சயில் பங்கேற்றது பெருமை அளிக்கிறது. அவர் இன்னும் பல பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் என வாழ்த்துகிறேன்.
அனைத்து மக்களின் துயரங்களையும் புரிந்து கொள்பவர் கருணாநிதி. சட்டமன்றத் தேர்தலில் இதுவரை தோல்வியை கண்டிராதவர். மக்களை நேசிப்பதுதான் அவரது தொடர் வெற்றிக்கு காரணம்.
மக்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் பிரதிபலிக்கும் தலைவர் கருணாநிதி. மக்கள் பிரச்சனைகளுக்காக தினமும் கடிதம் எழுதுகிறார். உங்கள் எண்ணங்களில் இருந்து, உங்கள் பிரச்சினைகளில் இருந்து எழுவதுதான், அவர் தினம் தினம் எழுதும் கடிதம்.
70 ஆண்டுகளாக தமிழ் மொழிக்காகவே பாடுபட்டவர். இந்தியா முழுவதும் தமிழ் கலாச்சாரம் பரவியிருக்கிறது. தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாடு இந்தியாவை மேலும் வலிமையாக்கும். கருணாநிதியின் பேச்சு தமிழக மக்களின் குரலாக ஒலிக்கிறது. தமிழக மக்களுக்காக ஸ்டாலினும் பேசி வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, யாரையம் கேட்காமல் பணத்தை செல்லாது என அறிவித்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை என நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறுகிறார். ஆனால், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதார தேக்கம் ஏற்பட்டிருப்பதாக உலகமே சொல்கிறது.
எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.