சொல்வதும் ஒன்றும், செய்வது ஒன்றுமாக ஆட்சியை செயல்படுத்தும் எடப்பாடி பழனிச்சாமி: விஜயகாந்த் பொளேர்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக, இரட்டை நிலைப்பாடுடன் இந்த ஆட்சியை செயல்படுத்துகிறார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை,
நெல் உற்பத்தியில் நடப்பாண்டில் தமிழ்நாடு 85 மூ சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டில் 8 லட்சத்து 83 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த ஆண்டைவிட, நடப்பு ஆண்டில் 1 லட்சத்து 73 ஆயிரம் மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது. ஏறக்குறைய நெல் உற்பத்தியில் சுமார் 85மூ சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் நெல் அதிகமாக உற்பத்தி செய்யும் டெல்டா பகுதிகளில், இந்த ஆண்டு கடும் வறட்சியை சந்தித்ததன் விளைவாகவும், தமிழகம் முழுவதும் எங்கும் தூர்வாராத நிலையும், காவிரியில் இருந்து உரிய தண்ணீர் பெற்றுத்தராத நிலையும், அதேபோல் தமிழ்நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலையும் அதிகரித்துள்ளதை நாம் பார்க்கமுடிகிறது.

இதன்விளைவாக ஒட்டுமொத்தமாக 85மூ சதவீதம் நெல் உற்பத்தி குறைந்துள்ளதை, மிகப்பெரிய அபாயகரமான எச்சரிக்கையாக நாம் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. உணவு உற்பத்தியில் முதல் இடத்தில் இருந்த தமிழகம், இன்றைக்கு இந்தியாவிலேயே கடைசி இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டு, நெல் உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

மேட்டூர் அணை உட்பட பல இடங்களில், பல ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். மேட்டூர் அணையில் 83 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் தூர்வாரப்படுகிறது. எத்தனையோ முறை தேமுதிக சார்பாக தூர்வரப்படவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இப்போது தூர்வாரப்படும் மண் 83 ஆண்டுகளுக்கு பிறகு அள்ளப்படுவதால் மிகவும் வளம்மிக்க மண்ணாக இருக்கும்.

எடப்பாடி விவசாயிகளுக்கு இலவசமாக தூர்வாரப்படும் மண் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் தூர்வாரப்படும் மண் முறைகேடாக, ஆளும் கட்சி தன் அதிகாரத்தை பயன்படுத்தி, செங்கல் சூளை வைத்திருப்பவர்களுக்கும், பெரும் பணக்காரர்களுக்கும் மட்டுமே லஞ்சத்தை வாங்கிக்கொண்டு வழங்கப்படுவதாக செய்திகள் வந்த வண்ணமாக உள்ளது.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் மணல்கொள்ளை, கனிமவளக் கொள்ளை, செம்மரக்கட்டை கொள்ளை, கிரானைட் கொள்ளை என்று அனைத்து இயற்கை வளங்களையும் பல ஆண்டுகளாக திமுக, அதிமுக கட்சிகள் அழித்து விட்டனர். இப்பொழுது புதிதாக தூர்வாரப்படும் மண்ணும் கொள்ளையடிக்கப்படுகிறது என்ற செய்தி, பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.

எனவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக, இரட்டை நிலைப்பாடுடன் இந்த ஆட்சியை செயல்படுத்துகிறார். எனவே உடனடியாக கொள்ளையடிக்கும் செயல்களை நிறுத்தி, விவசாயிகளுக்கு பயனளிக்கும் வண்ணம், தூர்வாரப்படும் மண்ணை பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் வெளிப்படையாக ஏலம் விட்டு, அதன் வருவாயை அரசுடமையாக்கப்படவேண்டும். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.