வடகொரியாவுக்கு புதிய பொருளாதார தடை: ஐ.நா. அதிரடி நடவடிக்கை

9 ஏவுகணை சோதனைகள் நடத்தியதின் எதிரொலியாக வடகொரியாவுக்கு புதிய பொருளாதார தடைகள் விதித்து ஐ.நா. சபை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பையும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தையும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

5 முறை அணுக்குண்டுகளை சோதித்துள்ள அந்த நாடு, இந்த ஆண்டில் இதுவரையில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமைமிக்க 9 ஏவுகணைகளையும் பரிசோதித்து பார்த்துள்ளது. இது அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு அந்த நாட்டின் மீது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக வடகொரியாவுக்கு புதிய பொருளாதார தடைகளை விதிக்கும் தீர்மானம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களுடன் நேரடி தொடர்பில் உள்ள 15 தனி நபர்களுக்கு உலகளாவிய பயண தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் சொத்துகள் முடக்கப்பட்டன. இதே போன்று அணு ஆயுத திட்டத்துடன் தொடர்புடைய 4 நிறுவனங்களின் சொத்துகளும் முடக்கப்பட்டன.

இதுபற்றி ஐ.நா. சபைக்கான தென் கொரிய தூதர் சோ டாய் யூல் கூறும்போது, “புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் வடகொரியாவின் தொழில் அதிபர்களும், அதிகாரிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அந்த நாட்டின் சில வணிக நிறுவனங்களும் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு, பொருளாதார தடை நடவடிக்கைக்கு ஆளாகி உள்ளன.

இது அந்த நாடு, தொடர்ந்து அணு ஆயுத திட்டங்களில் ஈடுபடுவதற்கு நிதி வழங்கும் ஆற்றலை கட்டுப்படுத்தும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் வடகொரியா மீது அமெரிக்கா வலியுறுத்திய மிகக்கடுமையான பொருளாதார தடைகளுக்கு எதிராக சீனா போர்க்கொடி உயர்த்தியது. அந்த தடைகளை விதிக்க முடியாதபடிக்கு முடக்கியும் விட்டது.

வடகொரியா மீதான பொருளாதார தடை தீர்மானம் நிறைவேறிய பிறகு அமெரிக்காவுக்கான ஐ.நா. சபை தூதர் நிக்கி ஹாலி கண்டிப்புடன் பேசினார். அப்போது அவர்,“ வடகொரியாவுக்கு ஐ.நா. சபை இன்று (நேற்று முன்தினம்) ஒரு தெளிவான செய்தியை விடுக்கிறது. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை படைத்த ஏவுகணைகளை சோதித்துப் பார்ப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள் அல்லது அதற்கான விளைவுகளை சந்தியுங்கள் என்பதுதான் அந்த செய்தி” என்று கூறினார்.

மேலும், “வடகொரியாவுடன் அனைத்து நாடுகளும் ராஜ்யரீதியிலான உறவுகளை துண்டித்துக்கொள்ள வேண்டும். சட்டவிரோத வர்த்தகத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். அந்த நாட்டின் அணுசக்தி திட்டங்களுக்கு நிதி வழங்குவதை நிறுத்த வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 6 சுற்று பொருளாதார தடைகளை ஏற்கனவே விதித்துள்ளது. இப்போது விதிக்கப்பட்டுள்ள 7-வது சுற்று பொருளாதார தடை, அந்த நாட்டிற்கு மிகுந்த பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும்.