சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதல் லீக்கில் பாகிஸ்தானுடன் நாளை மோதுகிறது. இதையொட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி, ஐ.சி.சி. இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:-
ஒரு தீவிர பாகிஸ்தான் ஆதரவாளராக, எந்த அணிக்கு எதிராக விளையாடினாலும் சரி குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக ஆடும் போது எங்களது அணி வெற்றியாளராக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை. இருப்பினும் சமீபகால செயல்பாடுகள் மற்றும் சரியான கலவையில் அணி அமைந்திருக்கும் விதத்தை பார்க்கும் போது இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை விட இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு சற்று அதிகமாக தெரிகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வலுவான பேட்டிங் வரிசையை கொண்டு இருக்கிறது. தங்களுக்குரிய நாளில், எந்த பந்து வீச்சையும் நொறுக்கி தள்ளி விடுவார்கள். ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலி மறக்க முடியாத சில இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறார். 2012-ம் ஆண்டு ஆசிய கோப்பையிலும், 2015-ம்ஆண்டு உலக கோப்பையில் அடிலெய்டில் நடந்த ஆட்டத்திலும் எங்களுக்கு எதிராக அவர் சதம் விளாசி இந்திய அணிக்கு வெற்றியை தேடித்கொடுத்தது இன்னும் எனது மனதை விட்டு அகலாமல் உள்ளது.
என்னை பொறுத்தவரை அவருக்கு பந்து வீசுவது எப்போதும் சவாலானது. அவரை கட்டுப்படுத்த பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் மிக உயரிய திறமையை வெளிப்படுத்தியாக வேண்டும். அவர் களத்திற்குள் வந்த உடனே, பாகிஸ்தான் தாக்குதல் ஆட்டத்தை தொடுக்க வேண்டும். அவரை சீக்கிரம் வீழ்த்தி விட்டால், இந்தியாவை குறைந்த ஸ்கோரில் கட்டுப்படுத்த வாய்ப்பு உருவாகும்.
பந்து வீச்சிலும் இந்தியாவை குறை சொல்ல முடியாது. இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்காமல் இருக்கலாம். ஆனால் அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் துல்லியமாக பந்து வீசக்கூடியவர்கள். அவர்களது பந்து வீச்சில் ரன் எடுப்பது கடினம். இளம் வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சு என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. அவரது பந்து வீச்சை கிட்டத்தட்ட ‘பாகிஸ்தானி யார்க்கர்’ என்றே அழைப்பேன். 1990-களில் எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் கச்சிதமாக யார்க்கர் வீசுவதில் கில்லாடிகளாக இருந்தனர். அதை பும்ராவின் பந்து வீச்சு நினைவுப்படுத்துகிறது.
இவ்வாறு அப்ரிடி கூறியுள்ளார்.