நிதியமைச்சு பதவி பறிபோக இது தான் காரணம்! மனம் திறந்த அமைச்சர்

ஊழல், மோசடிகளை கட்டுப்படுத்துவதற்காக அன்றி முற்றாக ஒழிப்பதற்காக முயற்சித்ததன் காரணமாகவே நிதியமைச்சுப் பதவி தன்னிடமிருந்து பறிபோனதாக ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதியமைச்சரும், தற்போதைய வெளிவிவகார அலுவல்கள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க, சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நேர்காணலில் தொடர்ந்தும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நிதியமைச்சராக நான் செயற்பட்ட காலத்தில் நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தி பத்து வீதத்திலிருந்து பதினாறு வீதமாக உயர்ந்துள்ளது. சுங்கத்திணைக்களத்தின் வருமானம் 200 வீதமாக அதிகரித்துள்ளது.

ஆசியாவின் மிகச் சிறந்த நிதியமைச்சர் விருது எனக்குக் கிடைக்கக் காரணம் நான் மிகச் சிறந்த முறையில் செயற்பட்டதன் காரணமாகவேயாகும்.

அதே நேரம் ஊழல், மோசடிகளை கட்டுப்படுத்த அன்றி முற்றாக ஒழிக்க நான் முயற்சிகளை மேற்கொண்டதன் காரணமாகவே நிதியமைச்சுப் பதவி என்னிடமிருந்து பறிபோயுள்ளது.

எனினும் நிதியமைச்சின் ஊடாக நாட்டினுள் வெற்றிக் கொடி நாட்ட முயற்சித்த நான் வெளிநாட்டமைச்சுப் பதவியினூடாக சர்வதேச மட்டத்தில் வெற்றிகளை ஈட்ட முடியும் என்று நம்புகின்றேன் என்றும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.