லண்டன் தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு

7 பேரை பலிகொண்ட லண்டன் தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக, அந்த அமைப்புடன் தொடர்புடைய இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று தாறுமாறாக ஓடி பாலத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியது.

இதனையடுத்து மூன்று பேர் லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடினர். கண்ணில் தென்பட்டவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பேர் பலியாகினர். 48 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதல்தாரிகள் மூன்று பேரையும் லண்டன் போலீஸ் சுட்டுக் கொன்றது. தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாகவே கருதப்படுவதாக லண்டன் போலீஸ் தெரிவித்தது. இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 12 பேரை கைது செய்துள்ளதாக லண்டன் நகர போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தகவலை ஐ.எஸ் அமைப்பின் ஆதரவு பெற்ற இணைய ஊடகம் செய்தியாக வெளியிட்டுள்ளது. எனினும், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஐ.எஸ் அமைப்பினர்தான் என்பதை லண்டன் போலீசார் உறுதியாக தெரிவிக்கவில்லை.

கடந்த மாதம் நடைபெற்ற மான்செஸ்டர் குண்டுவெடிப்புக்கும் ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.