தென்சீனக் கடலில் செயற்கை தீவுகளை அமைத்து ராணுவ தளங்களை அமைத்து வரும் சீனாவின் செய்கைகளை பொறுத்துக்கொள்ள முடியாது என அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ் தெரிவித்துள்ளார்.
தென்சீனக் கடல் பகுதியில் உள்ள சில தீவுகளை சொந்தம் கொண்டாடுவதில் பிலிப்பைன்ஸ், வியட்நாம், சீனா ஆகிய நாடுகளுக்கிடையே பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. இப்பிரச்சனை தொடர்பாக சர்வதேச தீர்ப்பாயத்தில் சில வழக்குகளும் நிலுவையில் உள்ளது.
இந்தக் கடல் பரப்பில் அவ்வப்போது ராணுவப் பயிற்சிகளை சீன அரசானது மேற்கொள்ளும். இதனால், சர்வதேச நாடுகளின் கண்டனத்திற்கு சீன அரசு ஆளாகும். மேலும், சர்வதேச நாடுகளின் கண்டனங்களை புறம் தள்ளிவிட்டு சீன அரசானது, கடல் பகுதிகளில் செயற்கைத் தீவுகளை அமைத்து, அத்தீவின் மீது ராணுவத் தளங்களை உருவாக்கி வருகின்றது.
இந்நிலையில், சிங்கப்பூரில் நடந்த ஷாங்ரி லா பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மேட்டிஸ், தென்சீனக் கடலில் ராணுவத் தளங்களை அமைத்துள்ள சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். அதே நேரத்தில் வடகொரிய விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சீனாவை அவர் பாராட்டினார். ஈராக், சிரியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமன்றி, ஆசிய நாடுகளிலும் பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.