ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி ஜிஹாதி ஜாக் சிரியாவில் பிடிபட்டான்

பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஜாக் லெட்ஸ்(21) என்பவன் கடந்த 2014-ம் ஆண்டு திடீரென்று தலைமறைவானான். பின்னாளில், அவன் சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து விட்டதாக தகவல் வெளியானது. அதற்கேற்ப ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் சீருடையுடன் அவன் தோன்றிய புகைப்படங்கள் ’ஜிஹாதி ஜாக்’ என்ற தலைப்புடன் முன்னர் இணையதளங்களில் வெளியானது.

சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் மீது பிரிட்டன் விமானப் படை நடத்திய தாக்குதல்களுக்கு முன்னர் கண்டனம் தெரிவித்திருந்த ஜிஹாதி ஜாக், பிரிட்டன் நாட்டை நாங்கள் நாசப்படுத்தாமல் விட மாட்டோம் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூனுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தான்.

இந்நிலையில், தற்போது சிரியாவில் உள்ள குர்திஷ் இன மக்களின் பிடியில் ஜிஹாதி ஜாக் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. லண்டனை சேர்ந்த பிரபல செய்தி தொலைக்காட்சி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. குர்திஷ் இன மக்கள் வசிக்கும் பகுதியில் சிறை வைக்கப்பட்டுள்ள தனது நிலைமை என்னவாகுமோ..? என்று அவன் அஞ்சி வருவதாகவும் கூறப்படுகிறது.

பிரிட்டன் நாட்டின் ஆக்ஸ்போர்டு நகரப் பள்ளியில் படித்துவந்த ஜாக் லெட்ஸ், பிரிட்டனில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு சிரியாவுக்கு சென்றான். அங்கிருந்தவாறு, இஸ்லாமிய மதத்தைத் தழுவி, ஈராக்கை சேர்ந்த ஒரு அழகிய பெண்ணை திருமணம் செய்து கொண்டான். இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து சண்டையிட்டு இறந்துப் போனதாக கருதப்பட்டுவந்த ஜிஹாதி ஜாக் இன்னும் உயிருடன் இருப்பதை அறிந்து லண்டனில் உள்ள அவனது பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.