பயங்கரவாத தாக்குதல் பீதி: இத்தாலியில் கூட்ட நெரிசல்-1500 பேர் காயம்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி கார்டிப் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ரியல் மாட்ரிட், ஜூவன்டஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியைக் காண்பதற்காக மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டி என்பதால், மக்கள் கூடும் இடங்களில் மிகப்பெரிய தொலைக்காட்சி திரைகள் அமைக்கப்பட்டு போட்டி நேரலை ஒளிபரப்பப்பட்டது.

அவ்வகையில் இத்தாலியின் துரின் நகரில் உள்ள பியாசோ சான் கார்லோ சதுக்கத்தில் இப்போட்டியைக் காண, மிகப்பெரிய தொலைக்காட்சி திரை அமைக்கப்பட்டிருந்தது. இங்கு ஜூவன்டஸ் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு போட்டியை கண்டுகளித்தனர்.

அப்போது கூட்டத்தில் இருந்து திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. தீவிரவாதிகள் தாக்குதல் நடந்திருப்பதாக யாரோ ஒருவர் கூற, ரசிகர்கள் பீதியடைந்து அந்த இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்தனர்.

முண்டியடித்துக்கொண்டு வெளியேறியதால் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில், 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் ஒரு சிறுவன் உள்ளிட்ட 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிகாரிகள் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததும், கூட்டத்தை சரியாக ஒழுங்குபடுத்தாததுமே இந்த நெரிசலுக்கு காரணம் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.