எல்லாமே படுமோசம்: பாகிஸ்தான் அணி மீது அப்ரிடி சாடல்

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடி, ஐ.சி.சி. இணையதளத்தில் நேற்று எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:-

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் மீது உருவான எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்த்து போய் விட்டன. மறக்க கூடிய ஒரு ஆட்டத்தை பாகிஸ்தான் வெளிப்படுத்தியது. ஒரு பாகிஸ்தான் ஆதரவாளராக உண்மையிலேயே இதை பார்க்க வேதனையாக இருந்தது.

இந்திய அணி மீண்டும் ஒரு முறை தனது அண்டை தேசமான பாகிஸ்தான் மீது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. பாகிஸ்தான் எளிதில் நொறுங்கி போனாலும் கூட, வெற்றி வாய்ப்புள்ள அணியாக கணிக்கப்பட்ட இந்தியா, அதற்குரிய தன்மையுடன் ஆட்டம் முழுவதும் விளையாடியது.

‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது மழையின் தாக்கத்தை கருத்தில் கொண்டு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இது போன்ற சூழலில் 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்கும். ஆனால் மோசமான திட்டமிடல், அணுகுமுறை, அதை விட படுமோசமான பீல்டிங் இவை எல்லாம் சாதகமான அம்சத்தை ஒன்றும் இல்லாமல் காலி செய்து விட்டது.

வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் முதல் ஓவரை அபாரமாக வீசினார். 2-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிமிடம் கேப்டன் சர்ப்ராஸ் வழங்கியது வினோதமாக இருந்தது. இத்தனைக்கும் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த சீதோஷ்ண நிலையே நிலவியது. இந்தியாவுக்கு ஆச்சரியம் அளிக்க வேண்டும் என்று சர்ப்ராஸ் நினைத்திருந்தாலும் கூட, இமாத் வாசிமுக்கு ஒன்று அல்லது 2 ஓவர் கொடுத்து விட்டு மீண்டும் வேகப்பந்து வீச்சை கொண்டு வந்திருக்க வேண்டும்.

இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் நிலைத்து நின்று விட்டால் அதன் பிறகு அவர்களை தடுத்து நிறுத்துவது கடினம். அவர்களை நிலைகொள்ளச் செய்ய பாகிஸ்தான் அனுமதித்து விட்டது. அதைத் தொடர்ந்து கோலி, யுவராஜ்சிங் அதிரடி காட்டி விட்டனர்.

பாகிஸ்தான் பீல்டிங் ரொம்ப சாதாரணமாக இருந்தது. உள்வட்டத்திற்குள்ளேயே நிறைய ரன்களை விட்டுக்கொடுத்தனர். சில கேட்சுகளையும் நழுவ விட்டனர். இவை எல்லாம் பவுலர்களுக்கு கடினமாகிப் போனது. இந்திய அணி 319 ரன்கள் குவித்த நிலையில், பேட்டிங்குக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் பாகிஸ்தான் 164 ரன்களில் சுருண்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு அப்ரிடி கூறியுள்ளார்.