வடமாகாண சபையில் நிர்வாக ரீதியான ஊழல் குற்றச்சாட்டும், நிதி மற்றும் நிர்வாக ரீதியான ஊழல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ள இரு அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, காலதாமதமின்றி குறிப்பிட்ட இரு அமைச்சர்களும் உடனடியாகப் பதவிகளை இராஜினாமாச் செய்வதன் மூலமே ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும் எனத் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராஜா.தெரிவித்தார்.
யாழ். உரும்பிராயில் நேற்றைய தினம் திங்கட்கிழமை முற்பகல் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட வடமாகாண எதிர்க்கட்சித் தலைவரிடம் வடமாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக வடமாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு விசாரணை நடாத்திய நிலையில் இரு அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் எனக் குறித்த குழு பரிந்துரை செய்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நான் கடந்த மூன்று வருட காலமாகத் தொடர்ச்சியாகச் சபையில் கூறி வந்த விடயங்கள் வெற்றியளிக்கும் வகையில் வடமாகாண முதலமைச்சரால் அமைக்கப்பட்ட மூவரடங்கிய விசாரணைக் குழுவினரால் விசாரணை செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கை அமையப் பெற்றிருக்கிறது.
வடமாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் எம்மால் அரசியல் ரீதியாக முன்வைக்கப்பட்டாலும் அந்தக் குற்றச்சாட்டுக்கள் தற்போது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையில் ஊழல் குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட்ட இரு அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறித்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாங்கள் வடமாகாண சபையில் விவாதித்த போது தன்னால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையின் படி நான் செயற்படுவேன் என முதலமைச்சர் உறுதிமொழி வழங்கியிருந்தார். அந்த உறுதிமொழியை அவர் காப்பாற்றுவார் என நம்புகின்றேன் என்றார்.