நேபாளத்தின் 40-வது பிரதமராக ஷேர் பகதூர் தியூபா தேர்வு செய்யப்பட்டார்

நேபாளத்தில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்-சென்டர்) மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகளிடையே ஏற்படுத்தப்பட்ட அதிகார பகிர்வு ஒப்பந்தத்தின் படி பிரதமர் பிரசண்டா தனது பதவியை கடந்த மாதம் 24-ம் தேதி ராஜினாமா செய்தார். நேபாள காங்கிரஸ் கட்சி தலைவர் ஷேர் பகதூர் தியூபா (வயது 70) புதிய பிரதமராக பதவியேற்கும் வகையில் பிரசண்டா ராஜினாமா செய்தார். தியூபா பெயரை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்தார்.

அதன்பின்னர், பிரதமர் பதவிக்கு நேபாள காங்கிரஸ் தலைவர் தியூபா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பிரதான எதிர்க்கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்), போட்டியிடுவதில்லை என முடிவு செய்தது. இதனால், தியூபா மட்டுமே போட்டியில் இருந்தார். எனவே, அவர் பிரதமராக தேர்வு செய்வது உறுதியானது.

ஆனால், பாராளுமன்றத்தில் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை வாக்குகளை பெறவேண்டும் என்பதால் ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டது. அப்போது, உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த சி.பி.எம். (யுஎம்எல்), பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் இடையூறு செய்யப்போவதாக எச்சரித்தது. எனவே, பாராளுமன்ற கூட்டத்தை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

அதன்படி, பாராளுமன்றம் இன்று மீண்டும் கூடியதும், பிரதமர் தேர்வுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 593 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில், பெரும்பான்மையை நிரூபிக்க 297 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதில், 388 வாக்குகள் பெற்று நாட்டின் 40-வது பிரதமராக தியூபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தியூபா இதற்கு முன்பு மூன்று முறை (1995-1997, 2001-2002, 2004-2005) பிரதமராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.