வளைகுடா நாடுகளின் ஒற்றுமை அவசியம்: சவுதி மன்னருக்கு டிரம்ப் கோரிக்கை

கத்தார் நாட்டுடனான தூதரக உறவை அமீரகம், சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன் ஆகிய 5 நாடுகள் திடீரென துண்டித்தன. பயங்கரவாத செயல்களுக்கு துணை போகும் வகையில் கருத்துகளை தெரிவித்ததற்காகவும், அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் செயல்பட்டு வருவதற்காகவும் கத்தார் மீது இந்த நடவடிக்கையை மேற்கண்ட 5 நாடுகள் எடுத்துள்ளன.
அமீரகத்தில் தங்கியிருக்கும் கத்தார் நாட்டை சேர்ந்தவர்கள் 14 நாட்களுக்குள் நாடு திரும்பவும், தூதரக அதிகாரிகள் 48 மணி நேரத்துக்குள் வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் கத்தார் நாட்டு விமானங்கள் தங்கள் நாட்டுக்குள் வரவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சவுதி அரேபிய மன்னர் சல்மானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, கத்தார் நாட்டின் மீதான் தடையால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர். வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.
இந்த உரையாடலின் போது, தீவிரவாதத்திற்கு எதிராக போராட, பிராந்திய ரீதியிலான ஒற்றுமையை நிலைநாட்டவும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் உள்ள நாடுகளின் ஒற்றுமையை உறுதி படுத்துங்கள்” என்று சவுதி மன்னரிடம் டிரம்ப் கூறினார்.
முன்னதாக கத்தார் நாட்டுடனான உறவை 4 அரபு நாடுகள் துண்டித்துள்ளதற்கு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.