கத்தார் நாடு அல் கொய்தா அமைப்பினரால் கடத்தப்பட்ட தமது அரச குடும்பத்தினரை மீட்க ஒரு பில்லியன் டொலர் மீட்பு தொகையாக வழங்கியதே சவுதி, பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் திடீர் கோபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி கத்தார் நாட்டுடனான ராஜாங்க உறவை சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் திங்களன்று துண்டித்துள்ளன.
கத்தார் நாடு சந்திக்கும் இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது கடந்த 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு சம்பவத்தை அரசியல் நோக்கர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கத்தார் அரச குடும்பத்தினர் உள்ளிட்ட 26 பேர் கொண்ட குழு ஒன்று இரவு வேட்டையாட புறப்பட்டுள்ளது. இந்த குழுவினரை அல் கொய்தா அமைப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் வந்து கடத்திச் சென்றனர்.
இவர்களை மீட்கும் பொருட்டு அல் கொய்தா அமைப்பினர் கோரிக்கை வைத்த ஒரு பில்லியன் டொலர் தொகையை கத்தார் நாடு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
மிகவும் ரகசியமாக நடைபெற்ற இந்த நடவடிக்கையானது தற்போது வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்தே சவுதி, பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் கத்தார் நாட்டை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதனிடையே கத்தார் சந்திக்கும் இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணம் தாம் தான் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றிருந்த ஜனாதிபதி டிரம்ப், மத அடிப்படைவாத அமைப்புகளுக்கு நிதி உதவி தருவதை வளைகுடா நாடுகள் கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அவரது பேச்சுக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே தற்போது கத்தார் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளதாக டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.