விராட்கோலியின் தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் மல்லையா

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சி லண்டனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி விட்டு தலைமறைவாக இருந்து வரும் தொழில் அதிபர் விஜய் மல்லையா யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அவரை கண்டு அதிர்ச்சி அடைந்த இந்திய அணி வீரர்கள் அவரை சந்திப்பதை தவிர்க்கும் வகையில் விரைவில் விருந்து நிகழ்ச்சியில் இருந்து கலைந்து சென்றனர். விராட்கோலி சார்பிலோ அவரது தொண்டு நிறுவனம் சார்பிலோ விஜய் மல்லையாவுக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற நிதி நிகழ்ச்சியில் அதிக விலையை டேபிள்களுக்கு செலுத்துபவர்களுக்கு விருந்தினர்களை அழைக்கும் உரிமை உண்டு என்றும் அந்த வகையில் வேறு யாரோ ஒருவர் விஜய் மல்லையாவை அழைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட்கோலி என்பது குறிப்பிடத்தக்கது.