சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் லண்டனில் நேற்று முன்தினம் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் (பகல்-இரவு) ஆஸ்திரேலியா-வங்காளதேசம் (ஏ பிரிவு) அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, ஆஸ்திரேலிய வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 44.3 ஓவர்களில் 182 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக முதல் லீக் ஆட்டத்தில் சதம் அடித்த தமிம் இக்பால் 95 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.
ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். அவர் ஒரு ஓவரில் தமிம் இக்பால் உள்பட 3 விக்கெட்டுகளை சாய்த்ததும் இதில் அடங்கும். ஆடம் ஜம்பா 2 விக்கெட்டும், ஹேசில்வுட், கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், ஹென்ரிக்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் (19 ரன்) ருபெல் ஹூசைன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். ஆஸ்திரேலிய அணி 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 40 ரன்னுடனும், கேப்டன் ஸ்டீவன் சுமித் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
மழை தொடர்ந்து பெய்ததால் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டன. இந்த போட்டி தொடரில் மழையால் ரத்து செய்யப்பட்ட 2-வது ஆட்டம் இதுவாகும். ஏற்கனவே ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் இதேபோல் மழையால் கைவிடப்பட்டது.
அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வி பெறும் நிலையில் இருந்த போது மழை பெய்ததால் தப்பியது. இந்த முறை வங்காளதேசத்தை எளிதில் வெல்லும் நிலையில் ஆஸ்திரேலிய அணி இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மேலும் 4 ஓவர்கள் நடந்து இருந்தால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணி வெற்றியை ருசித்து இருக்கும். ஆனால் மழை வலுத்ததால் ஆஸ்திரேலிய அணி ஒரு புள்ளியுடன் திருப்திபட வேண்டியதானது.
வங்காளதேச கேப்டன் மோர்தசா விக்கெட் வீழ்ந்த மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய அணியினர்.
2 புள்ளியுடன் இருக்கும் ஆஸ்திரேலிய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வருகிற 10-ந் தேதி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. அடுத்த சுற்றுக்கு முன்னேற கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி ஆஸ்திரேலிய அணிக்கு இருக்கிறது. 1 புள்ளியுடன் உள்ள வங்காளதேச அணி கடைசி லீக் ஆட்டத்தில் 9-ந் தேதி நியூசிலாந்தை சந்திக்கிறது.
ஆட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் அளித்த பேட்டியில், ‘வெற்றி பெற முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் வானிலையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. முந்தைய ஆட்டத்துடன் ஒப்பிடுகையில் எங்களது பந்து வீச்சு நல்ல முன்னேற்றம் கண்டு இருந்தது. எல்லா பந்து வீச்சாளர்களும் நன்றாக பந்து வீசினார்கள். அந்த வகையில் எனக்கு திருப்தி அளிக்கிறது. அரைஇறுதி வாய்ப்பை பெற அடுத்த ஆட்டத்தில் நாங்கள் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்’ என்று தெரிவித்தார்.
வங்காளதேச அணியின் கேப்டன் மோர்தசா கருத்து தெரிவிக்கையில், ‘ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை. அதேநேரத்தில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். தோல்வியில் இருந்து தப்பியதால் தொடரில் அடுத்த சுற்று வாய்ப்பில் நாங்களும் நீடிக்கிறோம். இந்த ஒரு புள்ளி எங்களுக்கு நிறைய வகையில் உதவி செய்யும். அடுத்த ஆட்டத்தில் நாங்கள் நியூசிலாந்துடன் மிகவும் கடினமாக விளையாட வேண்டும். சமீபத்தில் முத்தரப்பு தொடரில் நாங்கள் நியூசிலாந்து அணியை வீழ்த்தியதை யாரும் மறந்துவிட வேண்டாம். கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம்’ என்றார்.