தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக நடித்துவரும் படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’. இப்படத்தின் மூலம் தெலுங்கில் வளர்ந்து வரும் கதாநாயகியான ரேஷ்மா ரத்தோர் தமிழில் அறிமுகமாகிறார். நகைச்சுவை கலந்த வித்தியாசமான கதாபாத்திரத்தில் கருணாகரன் படம் முழுக்க வருகிறார். பாண்டியராஜன், ஆடுகளம் நரேன், மனோபாலா, யோக்ஜேப்பி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஒரு சாதாரண கிடார் இசை கலைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் ஒரு வித்தியாசமான சம்பவமும் அது தொடர்பான பல திருப்பங்களும் நிறைந்த நகைச்சுவை கலந்த பயணமே ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’.
இது ஒரு கற்பனை கதை என்றாலும் நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் என்றோ ஒருநாள் நம் வாழ்க்கையில் கடந்து வந்த ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் அடிப்படையிலேயே இந்த திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளதால் கதாநாயகனின் வாழ்க்கையோடு நம்மை நிச்சயமாக பொருத்தி பார்த்து கொள்ள முடியும்.
இப்படத்திற்காக மீண்டும் மீண்டும் கேட்டு மகிழும் வகையில் அட்டகாசமான பாடல்களை உருவாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் டி.இமான். பாடல் வரிகளை செதுக்கியிருக்கிறார் யுகபாரதி. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் குறிப்பாக ‘ஏன்டி நீ என்னை இப்படி’ என்கிற பாடல் இணையத்தில் இதுவரை 20 லட்சத்திற்கும் மேலான ரசிகர்களால் ரசிக்கப்பட்டும், நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களால் பாடி பதிவேற்றப்பட்டும் வருகிறது.
இப்படத்திற்கு ‘அட்டகத்தி’ மற்றும் ‘குக்கூ’ படங்களின் ஒளிப்பதிவாளர் பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜி.மதன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இன்பசேகர். சில்வர் ஸ்க்ரின் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பாக சிவரமேஷ்குமார் தயாரிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் காட்சியின் வெளியீட்டு விழா வரும் நாளை 8-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த டிரைலர் மற்றும் பாடல் காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். இப்படத்தை இம்மாதம் 16-ம் தேதி வெளியிடவுள்ளனர்.