தானிய வகைகளில் ஒன்றான கோதுமை உலகில் மற்றப் பயிர்களின் வணிகங்களைவிட அதிகம் செய்யப்படுவது. பஞ்சாபிகளின் முதன்மை உணவாக இருக்கும். இது நல்லதொரு உணவு மட்டுமல்ல, ஊட்டச்சத்துகள் நிறைந்தது. நோய்களைக் குணப்படுத்தும் மகத்துவம் வாய்ந்தது என்றால் மிகையாகாது.
இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கும் சர்க்கரை நோய் பிரச்சனைக்குப் பெரும் வரப்பிரசாதமாக உள்ளது. அதிலும் குறிப்பாக சம்பா கோதுமை சர்க்கரையின் அளவைக் கணிசமாகக் குறைப்பதுடன் மொத்தக் கொழுப்புச்சத்து மற்றும் டிரைகிளைசிரைட் (Triglyceride) அளவையும் கணிசமாகக் குறைக்கிறது. ஆகவேதான் நம் வைத்தியர்கள் இதை ஒரு மருந்தாகக் கருதுகிறார்கள். சம்பா கோதுமையில் அதிக நார்ச்சத்தும் உயிர்ச்சத்தும் நிறைந்திருக்கின்றன.
முதுகுவலியும் மூட்டுவலியும் பலரைப் பாடாய்ப்படுத்தி வருகிறது. இந்த அவதிக்குள்ளாகிறவர்கள் இதை வறுத்து, பொடியாக்கி அதனுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால் கைமேல் பலன் கிடைக்கும். கோதுமை, உளுந்து, கஸ்தூரி மஞ்சளைப் பொடியாக்கி வெந்நீர்விட்டுக் கலந்து, மூட்டுவலி உள்ள இடங்களில் பூசி வந்தாலும் நிவாரணம் கிடைக்கும்.
உடல் பருமன் என்பது இன்றைக்குப் பெரும் பிரச்னையாக இருக்கிறது. ஏதேதோ மருந்து, மாத்திரைகளைச் சாப்பிட்டும் பலன் கிடைக்காமல், பலரும் இயற்கை மருத்துவத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு கோதுமையும் கைகொடுக்கும். குறிப்பாக, கோதுமை ரவை நல்ல மருந்து. அதிக அளவிலான நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளது.
மேலும், குறைந்த கலோரி இருப்பது இதன் கூடுதல் சிறப்பு. இதனால் கோதுமை ரவையைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களின் உடல் எடை கணிசமாகக் குறையும். அதேநேரத்தில் உடல் ஆரோக்கியம் மேம்படும். இது, நமது உடலில் மெதுவாக உடைக்கப்பட்டு மெள்ள மெள்ளக் கரைவதால், எடையைக் குறைக்க உதவும். அத்துடன் ரத்த சர்க்கரையின் அளவைச் சமநிலையில் வைத்திருக்க பெரிதும் உதவும்.
கோதுமை ரவையில் கஞ்சி செய்து சாப்பிட்டு வந்தால், புளித்த ஏப்பம் போன்ற பிரச்னைகளுக்கு உடனடி நிவாரணம் பெற்றுத்தரும். மேலும் அஜீரணம், அசிடிட்டி பிரச்னை உள்ளவர்களுக்கு இது நல்ல பலனைத் தரும்.
கோதுமை மாவில் செய்த உணவுகளை உண்டு வந்தால், உடல் பலம் பெறும்; ஆண்மை அதிகரிக்கும். அக்கிப்புண், தீப்பட்ட இடங்கள், தோல் உரிந்த இடங்கள் போன்றவற்றில் இதன் மாவை நேரடியாகவோ, வெண்ணெய் சேர்த்தோ பூசினால் எரிச்சல் தணிவதோடு பிரச்னையின் தீவிரமும் குறையும்.
கோதுமை மாவை தண்ணீரில் நன்றாகக் கரைத்து உப்பு, காய்ச்சிய பால், ஏலக்காய் சேர்த்துக் காய்ச்சினால் அருமையான கஞ்சி ரெடி. இதைச் சாப்பிட்டு வந்தால், டி.பி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நலம் தேறும். கொழுப்பு குறையும். அதேநேரத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடுகளைச் சரி செய்யும். மாதவிலக்கு நேரங்களில் வரக்கூடிய அதிகப்படியான ரத்தப்போக்கு குறையும்.