கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. காலையில் உற்சாகத்துடன் பள்ளிக்கு செல்லும் தங்களது குழந்தைகள் மாலையில் குறிப்பிட்ட நேரத்துக்குள் வீடு வந்து சேராவிட்டால் பெற்றோர்கள் பதறிப் போய் விடுகிறார்கள்.
இதற்கு குழந்தைகள் மீது பெற்றோர் வைத்துள்ள பாசம் மட்டும் காரணம் அல்ல. அவர்களுக்கு ஏதும் ஆகிவிடக்கூடாதே? என்கிற பயமும் முக்கிய காரணமாகவே அமைந்துள்ளது.
இன்றைய காலச்சூழலில் குழந்தைகளுக்கான சமூக பாதுகாப்பு என்பது போதுமானதாக இல்லை என்று கூறினால் அது மிகையாகாது. ஏதாவது ஒரு பகுதியில் ஒரு குழந்தை வழிதவறி நின்றிருந்தால் அந்த குழந்தையை பத்திரப்படுத்தி வீட்டுக்கு அழைத்துச்செல்லும் மனிதர்களும் இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் குழந்தைகளை கடத்திச்சென்று தகாத செயல்களில் ஈடுபடுத்தும் கொடூர எண்ணங்களை கொண்ட மனிதர்களும் நம் கண்முன்னே நடமாடிக்கொண்டுதான் இருப்பார்கள்.
ஆனால் அவர்களை அடையாளம் காண்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
நம்மை சுற்றி சுற்றி வருபவர்கள் கூட பல நேரங்களில் காலை சுற்றும் பாம்பாக மாறி விடுகிறார்கள். இதனாலேயே யார் எப்படி? என்பதை கணிக்க முடியாமல் போய் விடுகிறது.
இதனை உணர்த்தும் வகையில் பள்ளி செல்லும் குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள், பள்ளி சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினால் தான் நிம்மதி என்கிற நிலையே நீண்ட காலமாக நீடித்து வருகிறது.
இப்படி குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகளை தடுத்து, அவர்களை பாதுகாப்பதற்காக புதிது புதிதாக சட்டங்களும் கொண்டு வரப்படுகின்றனர். ஆனால் அவை மட்டுமே குழந்தைகளை காக்கும் கருவிகளாக இருப்பதில்லை.
அதையெல்லாம் தாண்டி குழந்தைகள் விஷயத்தில் முன் எச்சரிக்கையாக இருப்பதே அவசியம் என்பதையும் பல்வேறு குழந்தை கடத்தல் சம்பவங்கள் நமக்கு உணர்த்தியுள்ளன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவையில் பள்ளி சென்ற 2 குழந்தைகள் கொடூரமாக கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவர்களை தினமும் பள்ளிக்கு அழைத்துச் சென்ற வேன் டிரைவர் இக் கொடூர செயலில் ஈடுபட்டார். பின்னர் போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு அந்த டிரைவர் இரையாகி இருந்தாலும், அந்த பயம் என்பது நாளடைவில் காணாமலேயே போய் விடுகிறது.
இதன் காரணமாகவே குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் எப்போதும் உஷாராக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறி உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தான் சென்னை மாநகர போலீசார் பள்ளி குழந்தைகள் பாதுகாப்பில் பல அறிவுரைகளை வழங்கி உள்ளனர்.
பள்ளி வளாகம் முழுவதிலும் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும், பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வேன் டிரைவர்கள் நல்லவர்களா? என்பதை அறிந்து பணியில் அமர்த்த வேண்டும் என்பது போன்ற விஷயங்களை பள்ளி நிர்வாகத்திடம் அறிவுறுத்தி உள்ளனர்.
இப்படி குழந்தைகளின் நலனுக்காக கொண்டுவரப்பட்டு பள்ளி நிர்வாகத்திடம் கூறப்பட்டுள்ள ஆலோசனைகள் முறையாக கடை பிடிக்கப்படுகிறதா? என்பது ஆய்வு செய்ய வேண்டியதும் அவசியமாகும். அப்போதுதான் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது நூற்றுக்கு நூறு உறுதிப்படுத்தப்படும்.