இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு கூட்டம் கோவையில் இன்று நடந்தது.
கூட்டத்தில் தேசிய செயலாளர் நாராயணா, மாநில செயலாளர் இரா.முத்தரசன், தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன், துணை செயலாளர் சுப்பராயன், புதுச்சேரி முன்னாள் மந்திரி விசுவநாதன், செயற்குழு உறுப்பினர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசின் 3 ஆண்டு கால ஆட்சியில் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றப்படவில்லை. மத ரீதியாக, சாதி ரீதியாக மக்களை பிளவுப்படுத்தி வருகிறது. இதுபற்றி மாநில குழுவில் விவாதிக்கப்படும்.
அ.தி.மு.க.வில் தற்போது பதவி சண்டைக்காக மக்கள் பிரச்சினைகளை பற்றி கவலைப்படாமல் இருக்கிறார்கள். மாநிலத்தின் உரிமைகள் பறிபோய் கொண்டு இருக்கிறது. இதுகுறித்தும் கூட்டத்தில் விவாதிக்க போகிறோம்.
தமிழகத்தில் ஆட்சி கவிழ்வதும், தொடர்வதும் அ.தி.மு.க. கையில் இல்லை. பா.ஜனதா கையில் தான் உள்ளது. அ.தி.மு.க. பல அணிகளாக இருந்தாலும் அனைத்து அணிகளையும் பா.ஜனதா கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது போல, மோடி அரசு கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறது.
இன்றும், நாளையும் நடைபெறும் இந்த மாநில குழுவில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைதொடர்ந்து தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு பிறகு தமிழகம் குறி வைத்து தாக்கப்பட்டு வருகிறது. கடந்த 1920-ல் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்தது தமிழகத்தில் தான். சீர்திருத்த திருமணம் நடந்ததும் தமிழகத்தில் தான்.
மாட்டுக்கு புல் போடாத கூட்டம், மாட்டிறைச்சி சாப்பிட தடை போடுகிறார்கள். ஜெயலலிதா இருந்திருந்தால் மாநில அரசின் உரிமைகள் விட்டு போய் இருக்காது. ஆட்சியாளர்களுக்கு துணிச்சல் இல்லை.
கடந்த 70 ஆண்டு காலத்தில் தலைமை செயலகத்தில் வருமான வரி சோதனை நடந்தது இல்லை. தமிழக அரசியலின் குழப்பத்துக்கு மத்திய அரசே காரணம்.
பொன்.ராதாகிருஷ்ணன் நல்ல மனிதர். சமீப காலமாக ஏதோதோ பேசி வருகிறார்.
பா.ஜனதாவில் வாஜ்பாய், அத்வானி போன்ற மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதி அனைவராலும் மதிக்கப்படுபவர். சட்ட மன்றத்தில் 60 ஆண்டு காலம் தோல்வியே சந்திக்காதவர். அவருக்கு விழா நடத்த தகுதி உள்ளது. இதில் முதியோர்கள் நடத்தும் விழா என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவது சரியல்ல. அவர் நாவடக்கத்துடன் பேச வேண்டும்.
தனியார் பாலில் கலப்படம் குறித்து அமைச்சர் விளக்க வேண்டும். பரிசோதனை முடிவின் உண்மைகளை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.