புதுடில்லி: இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 17ம் தேதி நடக்கிறது. இதையடுத்து வேட்பாளரை அறிவிக்க பா.ஜ.வும் காங்கிரசும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.
நாட்டின் 14ஆவது ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதி யுடன் முடிகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையகம் தீவிர ஆலோசனை நடத்தி வந்தது.
இந்நிலையில டில்லியில் தலைமை தேர்தல் ஆணையாளர் நஜீம் ஜைதி செய்தியாளர்களை நேற்று மாலை சந்தித்தார். அப்போது ஜனாதிபதி தேர்தல் குறித்து அவர் கூறியதாவது: ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடத்தப்படுகிறது. இதற்கான முறையான அறிவிப்பு ஜூன் 14ல் வெளியிடப்படும். அன்றே வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாகும் என்றார்.