சுனாமி வருவதற்கு வாய்ப்பே இல்லை! வதந்திகளை நம்ப வேண்டாம்

நாளைய தினம் இலங்கையில் மற்றுமொரு சுனாமிப் பேரனர்த்தம் ஏற்படும் என்றவாறாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

சோதிட சாஸ்திரத்தில் பாண்டித்தியம் கொண்டவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள பௌத்த பிக்குகள் சிலர் மற்றும் சிங்கள சோதிடர்கள் பலர் இந்த முன்னெச்சரிக்கையை விடுத்திருந்ததுடன், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் அது தொடர்பாக பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தனர்.

இலங்கையின் பல பாகங்களிலும் கடல்நீர் தரைப்பகுதிக்குள் ஆக்கிரமிப்புச் செய்தமை, மாத்தறைப் பிரதேசத்தில் கடல் உள்வாங்கியமை, நந்திக்கடலில் மீன்களின் இறப்பு போன்ற காரணிகளை முன்வைத்து இந்த முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் மேற்குறித்த சோதிடர்களின் கூற்றின் பிரகாரம் எந்தவொரு சுனாமி பேரனர்த்தமும் ஏற்படும் அபாய நிலையை இலங்கை எதிர்கொண்டிருக்கவில்லை என்று வானிலை அவதான நிலையம் தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே வதந்திகளை நம்பவோ, அது தொடர்பான செய்திகளை நம்பவோ வேண்டாம் என்றும் வானிலை அவதான நிலைய அதிகாரிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.