பதக்கங்களை விற்பனை செய்வதைத் தடுக்க விசேட சட்டமூலம்! தயாசிறி ஜயசேகர

சர்வதேச போட்டிகளில் பெற்றுக் கொள்ளப்படும் எந்தவொரு பதக்கத்தையும் ஏலமிடவோ, விற்பனை செய்யவோ முடியாத வகையில் புதிய சட்டமூலம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு இன்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. சுதந்திரக் கட்சியின் அமைச்சரவைப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர முதன்முதலாக இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது அண்மைக்காலத்தில் ஓட்டப் பந்தய வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க, தனது பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக ஒலிம்பிக் போட்டியில் பெற்றுக் கொண்ட பதக்கத்தை ஏலம் விடவுள்ளதாக அறிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடம் கேள்வியெழுப்பியிருந்தனர்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் தயாசிறி, சுசந்திகாவின் பதக்கம் நாட்டுக்குச் சொந்தமானது. அவர் அதனைப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கத்தின் சார்பில் எத்தனையோ கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளது.

எனவே அவருக்குத் தன் பதக்கத்தை விற்பனை செய்ய வேண்டுமென்றால் அதனை விளையாட்டுத்துறை அமைச்சுக்கு விற்பனை செய்ய முடியும். அதனைப் பாதுகாக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

அதே நேரம் எதிர்வரும் காலங்களில் சர்வதேசப் போட்டிகளில் பெற்றுக் கொள்ளப்படும் எந்தவொரு பதக்கத்தையும் விற்பனை செய்யவோ, ஏலமிடவோ முடியாதவாறான சட்டமூலம் ஒன்றை உருவாக்கவுள்ளேன். அவ்வாறு பெறப்படும் அனைத்துப் பதக்கங்களும் நாட்டுக்கு உரித்தானவையாக பிரகடனப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.