ரஜினிக்கு அழைப்பு விடுக்கும் ரவி கருணநாயக்க

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் புதிய வீடுகளை வழங்கும் நிகழ்ச்சி, ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வீடுகளை வழங்க இருந்தார்.

அப்போது, ‘இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து, தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வுகாண வேண்டுமென்று வேண்டுகோள் வைக்க எண்ணியிருந்தேன் என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

இதனிடையே, ‘ரஜினிகாந்த் இலங்கை செல்லக்கூடாது’ என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ரஜினிகாந்த் தனது இலங்கைப் பயணத்தை ரத்துசெய்தார்.

இந்நிலையில், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரவி கருணாநாயகே இந்தியா வந்துள்ளார்.

டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ரஜினி இலங்கை வர நினைத்தால் வரலாம். அவர் அங்கும் பிரபலமான நடிகர்தான். அவருக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. எனவே, அவர் வருவதில் ஒரு பிரச்னை யும் இல்லை” என்று கூறினார்.