கத்தாருடன் தூதரக உறவு ’கட்’ – ஏழாவது நாடாக இணைந்தது மாலத்தீவுகள்

வளைகுடா நாடான கத்தாருடன் சவூதி, பக்ரைன், எகிப்து உள்ளிட்ட 6 நாடுகள் தூதரக உறவை முறித்துக்கொண்ட நிலையில், தற்போது இதில் ஏழாவது நாடாக மாலத்தீவுகளும் இணைந்துள்ளது.

ஜ.எஸ்.தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி செய்வதாக குற்றம்சாட்டி கத்தாருடன் ஆன தூதரக உறவை 6 அரபு நாடுகள் துண்டித்தன. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன், அமீரகம், லிபிய ஆகிய நாடுகள் மேற்கண்ட நடவடிக்கையை மேற்கொண்டன.

இதனால் விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தூதர்கள் திரும்ப பெறப்பட்டனர். மேலும் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் நிலவுகிறது. கத்தார் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன. குறிப்பாக கத்தார் மீது தூதரக தடை விதித்த ஐந்து அரபு நாடுகள் இடையே சமரசம் ஏற்படுத்த குவைத்தும், துருக்கியும் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், இதில் மாலத்தீவுகளும் இணைந்துள்ளது. மாலத்தீவு, கத்தாருக்கு எதிரான முடிவை எடுத்துள்ள போதும் அது கடினமானதாக இல்லாமல் சற்று தளர்வானதாகவே உள்ளது. கத்தாருடனான தூதரக உறவுகள் மட்டுமே துண்டிக்கப்படும் எனவும், வர்த்தக உறவுகள் தொடரும் எனவும் மாலத்தீவு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் கத்தார் மற்றும் அந்த பிராந்தியத்தில் முக்கிய நாடாக விளங்கும் சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளுடனான தனது உறவை சரி சமமாக வைத்துக் கொள்ள மாலத்தீவு விரும்புகிறது. சவுதி அரேபியா, பக்ரைன் மற்றும் ஐக்கிய அமீரகங்களை போல அல்லாமல் கத்தார் விமானங்களுக்கான தனது வான்பரப்பை மாலத்தீவு மூடவில்லை. மேலும் கத்தார் மக்களை அங்கிருந்து வெளியேற உத்தரவிடவும் இல்லை.

மாலத்தீவில் கத்தார் அதிகளவிலான முதலீடுகளை செய்துள்ளதே இதற்கு காரணமாகும்.