இங்கிலாந்து பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் 2020-ம் ஆண்டுதான் முடியும் நிலையில் இருந்தது. ஆனால் அந்த நாடு, ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக திடீரென முடிவு எடுத்தது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இந்த மாதம் 19-ந் தேதி நடக்க உள்ளது.
இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு நாட்டில் வலிமை வாய்ந்த, நிலையான தலைமை தேவை என்று கூறி பாராளுமன்றத்துக்கு திடீர் தேர்தலை நடத்தப்போவதாக பிரதமர் தெரசா மே அறிவித்தார். இதற்கு பாராளுமன்றமும் ஒப்புதல் அளித்தது.
அதைத்தொடர்ந்து பாராளுமன்றத்துக்கு ஜூன் 8-ந் தேதி (இன்று) தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த நாட்டில் உள்ள 650 பாராளுமன்ற தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் நடைபெற்று வந்த நிலையில் மான்செஸ்டரில் நடந்த பயங்கரவாத தாக்குதல், லண்டனில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் ஆளும் கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் முதலில் தெரசா மேயின் கன்சர்வேடிவ் கட்சிக்கு எதிர்க்கட்சியான தொழிற்கட்சியை விட 20 சதவீதம் ஆதரவு இருப்பதாக காட்டின. ஆனால் இந்த ஆதரவு குறைந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் வெளியான கருத்துக்கணிப்பு முடிவு, தொழிற்கட்சியை விட கன்சர்வேடிவ் கட்சிக்கு ஒரு சதவீதம் மட்டுமே கூடுதல் ஆதரவு இருப்பதாக காட்டுகிறது.
கன்சர்வேடிவ் கட்சிக்கு 41.6 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கு 40.4 சதவீதம் பேர் ஆதரவு அளிக்கின்றனர்.
இதன் காரணமாக தெரசா மே கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சியைத் தக்க வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.