அமெரிக்க உளவுத்துறை எப்.பி.ஐ.யின் (மத்திய புலனாய்வு அமைப்பு) இயக்குனராக பதவி வகித்து வந்த ஜேம்ஸ் கோமியை, கடந்த மாதம் ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக பதவி நீக்கம்செய்து உத்தரவிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் பிரசார குழுவுக்கும், ரஷியாவுக்கும் இடையே இருந்ததாக கூறப்படும் தொடர்பு குறித்து எப்.பி.ஐ. விசாரணை நடத்துவதால்தான், ஜேம்ஸ் கோமி நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியது.
இந்த நிலையில் எப்.பி.ஐ.யின் புதிய இயக்குனராக கிறிஸ்டோபர் ரேயை நியமிப்பதாக ஜனாதிபதி டிரம்ப் நேற்று டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.
தனது பதவி நீக்கம் தொடர்பாக பாராளுமன்ற செனட் சபையின் தேர்வுக்குழு முன்னிலையில் ஜேம்ஸ் கோமி ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ள நிலையில், டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ரே, அமெரிக்க நீதித்துறையின் குற்றப்பிரிவில், உதவி அட்டார்னி ஜெனரல் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.