கத்தாருடனான உறவு தொடரும் என துருக்கி அதிபர் எர்டோகன் அறிவிப்பு

சவூதி, எகிப்து உள்ளிட்ட ஏழு நாடுகள் கத்தாருடனான தூதரக உறவை முறித்துக்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டுடனான உறவில் மாற்றமில்லை எனவும், தேவையான உதவிகள் செய்வோம் என துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார்.

ஜ.எஸ்.தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி செய்வதாக குற்றம்சாட்டி கத்தாருடன் ஆன தூதரக உறவை 6 அரபு நாடுகள் துண்டித்தன. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன், அமீரகம், லிபியா, மாலத்தீவு ஆகிய நாடுகள் மேற்கண்ட நடவடிக்கையை மேற்கொண்டன.

இதனால் விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தூதர்கள் திரும்ப பெறப்பட்டனர். மேலும் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் நிலவுகிறது. கத்தார் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன.

இந்நிலையில், துருக்கி தலைநகர் அங்காரவில் கத்தார் மீதான தடை குறித்து அதிபர் எர்டோகன் பேசும்போது, “கத்தார் மீதான வளைகுடா நாடுகளின் தடை நல்லதல்ல என்று நாங்கள் நினைக்கிறோம். கத்தாரை தனிமைப்படுத்துவதால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு ஏற்படாது. எங்களது துயரமான நேரங்களில் எங்களுக்கு கத்தார் நண்பர்கள் துணையிருந்துள்ளனர். கத்தாருடனான துருக்கியின் உறவு தொடரும்” என்றார்.

இதனையடுத்து, கத்தாருக்கு தேவையான உணவுப்பொருட்கள் மற்றும் பாதுகாப்பு தேவைகளுக்கான ராணுவ உதவிகள் வழங்க துருக்கி முடிவு செய்துள்ளது. எனினும், எர்டோகன் சவூதி அரேபியாவின் நிலைப்பாடு குறித்த கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.