கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு, கடந்த மாதம் (மே) 9-ந் தேதி 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்த சுப்ரீம் கோர்ட்டு, அவரை உடனடியாக கைது செய்யுமாறு மேற்கு வங்காள போலீசுக்கு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, மேற்கு வங்காள போலீசார், நீதிபதி கர்ணனை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இதுவரை அவரை கைது செய்ய முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அசோக் பூஷன், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய விடுமுறை அமர்வில் நீதிபதி சி.எஸ்.கர்ணன் சார்பில் வக்கீல் மேத்யூஸ் நெடும்பாரா ஆஜராகி 2 மனுக்கள் தாக்கல் செய்தார். அதில் ஒரு மனுவில், 6 மாத ஜெயில் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
2-வது மனுவில், ‘ஐகோர்ட்டு நீதிபதி பதவியில் உள்ள கர்ணனை, சுப்ரீம் கோர்ட்டு பதவி நீக்கம் செய்யவோ, ஜெயில் தண்டனை வழங்கவோ முடியாது. பாராளுமன்றம் கூடி முடிவு எடுக்க வேண்டும், சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் கிடையாது. அவருடைய விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது’ என்று கூறப்பட்டு இருந்தது.
மேலும், நீதிபதி சி.எஸ்.கர்ணன் வருகிற 12-ந் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெறுவதால் இந்த இரு மனுக்களையும் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வக்கீல் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் இந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து உத்தரவு வழங்கி உள்ளது.
இந்த நிலையில் விடுமுறை அமர்வு இந்த மனுவை எந்த வகையிலும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது, ஜெயில் தண்டனையை ரத்து செய்ய முடியாது என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.