இறைச்சிக்காக மாடு விற்க, வாங்க தடை: மத்திய அரசு உத்தரவை எதிர்த்து வழக்கு

கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என தடை விதித்தும், மாடு வாங்கல், விற்றலை ஒழுங்குபடுத்தியும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் கடந்த மாதம் ‘மிருகவதை தடை தடுப்பு (கால்நடை சந்தை ஒழுங்குமுறை) விதிகள்- 2017’ என்ற தலைப்பில் அறிவிக்கை வெளியிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஐதராபாத்தை சேர்ந்த அப்துல் பஹீம் குரேஷி ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த வழக்கில் கூறி இருப்பதாவது:-

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கை தன்னிச்சையானதும் சட்டவிரோதமானதுமாகும். அரசியல் சட்டம் வழங்கும் கருத்து சுதந்திரம், மத ரீதியான சுதந்திரம், பண்பாட்டு சுதந்திரம் ஆகியவற்றுக்கு எதிரானது.

கால்நடைகளை விற்பது, வாங்குவது அல்லது மறு விற்பனை ஆகியவற்றின் மீது தடை விதிப்பது விவசாயிகள், கால்நடை வணிகர்களுக்கு பொருளாதார ரீதியாக கடுமையான நெருக்கடிகளை உருவாக்கும். இதனால் விவசாயிகள் மற்றும் கால்நடை வணிகர்கள் வளர்க்கும் விலங்குகள் மட்டுமின்றி அவர்களின் குழந்தைகளும் பட்டினி கிடக்க வழிவகுக்கும்.

இந்த உத்தரவால் விவசாயிகள் மற்றும் கால்நடை வணிகர்கள், பசு காவலர்களால் மிரட்டலுக்கும், கொடுமைக்கும் ஆளாகும் சூழ்நிலை உருவாகும். எனவே, இந்த விதிமுறைகள் மனிதனின் அடிப்படை வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

உணவு தொடர்பான ஒருவரின் தேர்வு (சைவம் அல்லது அசைவம்), அவரது தனிப்பட்ட சுதந்திரம், மனசாட்சி மற்றும் அந்தரங்கம் ஆகியவற்றின் அங்கமாகும்.

எனவே, உணவுக்காக விலங்குகளை கொல்வதன் மீது தடை விதிப்பது அசைவ உணவை உண்பவர்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானதாகும்.

விலங்குகளை மத சடங்குகளுக்காக பலியிடுவதை தடுப்பதும் ஒருவரின் மத ரீதியான சுதந்திரத்தில் தலையிடுவதாகும். மிருகவதை தடை சட்டத்தின் 28-ம் பிரிவு மத சடங்குகளுக்காக விலங்குகளை பலியிடுவதை அனுமதிக்கிறது. ஆனால் தற்போது மத்திய அரசு விதித்துள்ள விதிமுறைகள் பலியிடுவதை தடை செய்கிறது. இதனால் மிருகவதை தடுப்பு தொடர்பான மூல சட்டத்துக்கு எதிராக இந்த விதிமுறை அமைந்துள்ளது.

மத்திய அரசு இந்த விதிமுறைகளை தன்னிச்சையாக வெளியிட்டு உள்ளதால் இது மாநில அரசுகளின் உரிமையில் தலையிடும் தவறை செய்துள்ளது. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு முற்றிலும் எதிரானதாகும். எனவே மிருகவதை தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

வழக்குதாரர் அப்துல் பஹீம் குரேஷி தரப்பில் அவருடைய வக்கீல் சனோபர் அலி குரேஷி, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விடுமுறை அமர்வு நீதிபதிகள் அசோக் பூஷண், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜர் ஆனார்.

அவர், மத்திய அரசின் உத்தரவுக்கு எதிரான இந்த வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு வரும் 15-ந் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.