அனல் பறக்கும் அரசியல் சூழல்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்!

தமிழகத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வரும் சூழலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதிமுகவில் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் தன்னை நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கே உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே டிடிவி தினகரனுக்கு வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், கதிர்காமம் உள்ளிட்ட 32 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் எடப்பாடி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து கவிழ்ந்து விடும் என்று கருதப்படுகிறது. மேலும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 12 எம்.எல்.ஏக்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஜி.எஸ்.டி. மசோதா, டாஸ்மாக் எதிர்ப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் 5வது அமைச்சரவை கூட்டம் இதுவாகும். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டப்படுவதால் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும் எம்.எல்.ஏக்கள் டிடிவி தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.