மராட்டிய மாநிலம் சோலாப்பூரில் உள்ள அவ்யான் லைப் சயின்ஸ் என்ற நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தானே குற்றப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள ‘எபெட்ரின்’ என்ற போதைப்பொருள் சிக்கியது.
இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் நிர்வாகிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இந்த போதைப்பொருள் வழக்கில் சர்வதேச போதைப்பொருள் மன்னன் விக்கி கோஸ்வாமி மற்றும் அவரது மனைவியும், இந்தி நடிகையுமான மம்தா குல்கர்னி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுபற்றி அறிந்ததும் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் விக்கி கோஸ்வாமி கென்யாவில் அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே கணவன், மனைவி இருவருக்கும் எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து தானே செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த போதைப்பொருள் வழக்கில் நடிகை மம்தா குல்கர்னியை தானே கோர்ட்டு தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.